கண்டி தெல்தெனியாவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தினுள் சடலமாக மீட்கப்பட்ட இளம் இயன்முறை சிகிச்சையாளரின் (Physiotherapist) மரணம் தொடர்பான விசாரணைகளில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இவ்வழக்கில் சந்தேகநபராகக் கருதப்படும் அவரது காதலன் யாழ்ப்பாணத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரும் அவரது மனைவியும் நேற்று வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அவர்களை கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் தொடர்பாக நுவரெலியா பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தகவல் வழங்கியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர் அம்பாறை மருத்துவமனையில் பணியாற்றி வந்த 33 வயதுடைய இயன்முறை மருத்துவர் எனவும், அவர் வெலிகம பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

