அரசாங்கத்தால் வழங்கப்படும் உர மானியத்தை ஒரு ஹெக்டேருக்கு ரூபாய் 30,000 ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிகா ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசு தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
இதனடிப்படையில், அரசாங்கத்தால் வழங்கப்படும் உர மானியம் ஒரு ஹெக்டேருக்கு ரூபாய் 25,000 இலிருந்து ரூபாய் 30,000 ஆக (ரூபாய் 5,000 இனால்) உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மானியத் தொகை தகுதியுடைய 502,836 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ஒரேயடியாக நேரடியாக வரவு வைக்கப்படும்.
இதற்காக அரசாங்கம் ரூபாய் 10,947 மில்லியனைச் செலவிட்டுள்ளதுடன் மானிய உயர்வின் காரணமாக வழக்கத்தை விட ரூபாய் 2,500 மில்லியன் கூடுதலாகச் செலவிடப்பட்டுள்ளது.
சந்தை விலை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் இப்பருவம் முழுவதும் விவசாய சேவை மையங்கள் மூலம் யூரியா உர மூடை ஒன்று ரூபாய் 10,200 என்ற நிலையான விலையில் வழங்கப்படும்.
இந்தப் பருவத்தில் இதுவரை 409,670 ஹெக்டேர் நிலத்தில் நெல் சாகுபடி தொடங்கப்பட்டுள்ளதுடன் அதில் 364,900 ஹெக்டேருக்கு ஏற்கனவே உர மானியம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

