2015 முதல் 2025 வரையிலான 10 ஆண்டு காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 108,581 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகப் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
சஜித் பிரேமதாசவினால் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு இன்று (23) பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதிய நிலவரப்படி, உயர்நீதிமன்றத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 4421 வழக்குகள் விசாரணையில் இருப்பதுடன், சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அத்தகைய வழக்குகளை விரைவாக முடிவு செய்யும் பொருட்டு, பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவு ஊடாக 47 பொலிஸ் பிரிவுகளின் சிறுவர் மற்றும் பாதுகாப்புப் பணியகங்களை ஒருங்கிணைத்து வழக்கு ஒழுங்குமுறை நடவடிக்கைகளைச் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேற்கொண்டு வருகிறது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான மேலதிக நடவடிக்கையாக, சிறுவர்களை நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தாமல், எத்தகைய தாக்கங்களுக்கும் உட்படாத சூழலில் காணொளி சாட்சியங்களைப் பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
அதற்கமைய, மாகாண மட்டங்களில் காணொளி சாட்சியங்களைப் பதிவு செய்யும் ஒன்பது அலகுகளை நிறுவுவதற்குப் பொருத்தமான இடங்களை அடையாளம் காணும் பணிகள், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுகள் உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினருடன் பேசித் தீர்க்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட சிறுவர்கள் தொடர்பான 5,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30 வரை உள்ள காலகட்டத்தில் சிறுவர்கள் தொடர்பாக 5,523 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
அவற்றுள், சிறுவர்களைக் கொடுமைப்படுத்துதல் தொடர்பில் 1100 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 60 முறைப்பாடுகளும், பாலியல் தொல்லைகள் தொடர்பாக 213 முறைப்பாடுகளும், சிறுவர்களை சட்டவிரோதமாகச் சுரண்டுவது தொடர்பாக 99 முறைப்பாடுகளும், சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தியது தொடர்பாக 100 முறைப்பாடுகளும், சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பாக 82 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் இளைய பருவ கர்ப்பங்கள் தொடர்பாக 40 முறைப்பாடுகளும், சிறுவர் திருமணம் தொடர்பாக 5 முறைப்பாடுகளும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்குக் கிடைத்துள்ளன.
சிறுவர்களுக்கு எதிரான இணையவழி சித்திரவதை (சைபர் துஷ்பிரயோகம்) தொடர்பாக 112 முறைப்பாடுகளும், தற்கொலைக்கு முயற்சித்தமை தொடர்பாக 13 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

