ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசால் ராஜபக்ச குடும்பத்தினர் அனைவரும் திட்டமிட்ட முறையில் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்வைத்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முறையான நடவடிக்கை
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தற்போதைய திசைகாட்டி அரசானது ராஜபக்ச குடும்பத்தினரைப் பழிவாங்கும் ஒற்றை நோக்கத்துடன்தான் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றது.
ஒவ்வொரு நாளும் எம்மைக் குறிவைத்து ஏதாவதொரு வகையில் இந்தப் பழிவாங்கல் நடவடிக்கைகளை அரசு மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.
மாறாகத் தற்போதைய கடுமையான பொருளாதாரச் சூழலில் சிக்கியுள்ள நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கோ அல்லது அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய நிவாரணங்களை வழங்குவதற்கோ அரசு எவ்வித முறையான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
அரசின் இத்தகைய பழிவாங்கல் அரசியல் போக்கு மற்றும் பொருளாதாரத் தோல்விகள் காரணமாகத் தற்போதைய ஆட்சியின் மீது நாட்டு மக்கள் மிகக் குறுகிய காலத்துக்குள்ளேயே கடுமையான அதிருப்தியடைந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

