கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பணமாகவோ அல்லது அட்டைகள் (Cards) மூலமாகவோ, அதேபோன்று ETC (Electronic Toll Collection) தொழில்நுட்பம் மூலமாகவோ கட்டணங்களைச் செலுத்தி சேவையைப் பெற்றுக்கொள்வதை மேலும் விரிவுபடுத்துவதற்கு நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, இந்த வசதிகள் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்று (15) முன்னெடுக்கப்பட்டன.
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கட்டணங்களைச் செலுத்துவதற்கு பணம் அல்லது அட்டைகளைப் பயன்படுத்துவதோடு, ETC முறையையும் பயன்படுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ETC வசதியைப் பயன்படுத்துபவர்களுக்காக நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் பிரத்தியேகமான தனி வழிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், எவ்வித தாமதமுமின்றி நுழைந்து வெளியேறும் வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ETC வசதியைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒவ்வொரு பயணத்தின்போதும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலிருந்து 10% கட்டணக் கழிவு (Discount) வழங்கப்படும்.
தற்போது பேலியகொடை, கெரவலபிட்டிய, ஜா-எல மற்றும் கட்டுநாயக்க ஆகிய இடமாற்றல் மையங்களில் ETC மூலம் கட்டணங்களைச் செலுத்த முடியும் என்பதோடு, எதிர்காலத்தில் கடவத்தையிலிருந்து வெளிவட்ட வீதி ஊடாக கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் வாகனங்களுக்காக, கடவத்தை இடமாற்றல் மையத்திலும் இந்த வசதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதுவரை காலமும் ETC வசதியைப் பெற்றுக்கொள்வதில் வாகன உரிமையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டதோடு, அதற்காகப் பல இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலையும் காணப்பட்டது.
இதனைக் கருத்திற் கொண்டு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) என்பன இணைந்து, www.exway.rda.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக மிக இலகுவாக ETC வசதிக்காகப் பதிவு செய்துகொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.
இணையத்தளத்தில் பதிவு செய்த பின்னர், தமக்கு நெருக்கமான ஏதேனும் ஒரு பரிமாற்ற மையத்திலிருந்து RFID Tag ஐப் பெற்றுக்கொள்ள முடியும். அதன் பின்னர், இந்த இணையத்தளம் அல்லது Govpay ஊடாகத் தமது வங்கி அட்டையைப் பயன்படுத்தி, தமது ETC கணக்கிற்குப் பணத்தை வைப்பிலிட்டு Top up செய்துகொள்ளலாம். இதன் மூலம் எவ்வித தடையுமின்றி அதிவேக நெடுஞ்சாலையின் பயணக் கட்டணம் தானியங்கி முறையில் (Automatically) அறவிடப்பட்டு, எவ்வித தாமதமுமின்றி வெளியேற முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, எவ்வித தடங்களுமின்றி ETC வசதியைப் பயன்படுத்துவதற்காக, நுழைவு மற்றும் வெளியேறும் புள்ளிகளில் மணித்தியாலத்திற்கு 15 கிலோமீற்றர் (15 km/h) வேகத்தைப் பேணுமாறும், முன்னால் செல்லும் வாகனத்திற்கும் தமக்கும் இடையில் 20 மீற்றர் இடைவெளியைப் பேணுமாறும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

