எந்த கொம்பனாக இருந்தாலும், உலகில் எந்த மூலையில் பதுங்கி இருந்தாலும் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்டப்பட்டுவருகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
கொழும்பில் அமைச்சில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு முடிவு கட்டப்படும் என நாம் உறுதியளித்திருந்தோம். இதற்காக பொலிஸார் உட்பட பாதுகாப்பு துறையினருக்கு தேவையான வளங்களை வழங்கினோம். அவர்கள் சிறப்பாக தமது கடமைகளை செயல்படுத்தி வருகின்றனர்.
போதைப் பொருள் கடத்தல் மன்னர்கள் சிக்கி, சிறைக்கு சென்றுள்ளனர்;. நீதிமன்றத்தக்குள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபர்கள்கூட நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் இப்படியான கைதுகள் நடத்தப்படவில்லை.

