பொதுவாக உலகளவில் போர் அல்லது பொருளாதார நெருக்கடி ஏற்படும் காலங்களில், முதலீட்டாளர்கள் தங்களின் பாதுகாப்பான புகலிடமாக தங்கத்தையே கருதுவர்.
இதனால் தங்கத்தின் விலை கடுமையாக உயரும். ஆனால், 2026 ஆம் ஆண்டின் தற்போதைய சூழல் இதற்கு நேர்மாறாக அமைந்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து பல மாதங்களாக நீடிக்கும் போரினால், தங்கத்தின் விலை சரிவைச் சந்தித்து வருவது பொருளாதார நிபுணர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 28 அன்று ஒரு ட்ராய் அவுன்ஸ் (31.1 கிராம்) தங்கம் 5,303 டொலர் என்ற உச்சத்தில் இருந்தது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி இது 4,235 டொலராகக் குறைந்துள்ளது.
இதற்கு முக்கியக் காரணமாக சர்வதேச சந்தையில் நிலவும் பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் பார்க்கப்படுகிறது.
பணவீக்கம் அதிகரிப்பதற்கு ‘ஹோர்முஸ் ஜலசந்தி’ ஒரு முக்கியக் காரணியாக உள்ளது. போரின் தொடக்கத்திலிருந்து ஈரான் இந்தப் போக்குவரத்துப் பாதையைத் தடுத்து வருவதால், எரிவாயு மற்றும் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் எரிசக்தி விலைகள் உயர்ந்து, அமெரிக்காவில் பணவீக்கம் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவாக 4.2 சதவீதத்தை எட்டியுள்ளது. வழக்கமாக தங்கம் பணவீக்கத்திற்கு எதிரான ஒரு அரணாகச் செயல்படும்.
இருப்பினும், தங்கம் என்பது வட்டி அல்லது லாபப்பங்கு (Dividends) தராத ஒரு முதலீடாகும். அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும்போது, முதலீட்டாளர்கள் தங்கத்தை விட டொலரில் முதலீடு செய்யவே விரும்புவர். ஈரான் போர்ச் சூழல் அமெரிக்க டொலரை வலிமைப்படுத்தியுள்ளது.
தங்கம் டொலரில் விலை நிர்ணயம் செய்யப்படுவதால், டொலர் வலிமையடையும் போது தங்கத்தின் விலை அழுததத்திற்கு உள்ளாகி வீழ்ச்சியடைகிறது.

