ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போரின் எதிர்காலப் பாதை குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (20) முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்தார்.
மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் தனக்கு அவசரமில்லை என்று அறிவித்த அதே வேளையில், தெஹ்ரானுடனான மேலதிகப் பேச்சுவார்த்தைகள் விரைவில் பாகிஸ்தானில் நடைபெறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
14 நாள் போர் நிறுத்தம் புதன்கிழமை (22) முடிவடைய உள்ள நிலையில் ட்ரம்ப் தொலைபேசி நேர்காணல்களிலும் சமூக ஊடகப் பதிவுகளிலும், விரைவில் ஒரு உடன்பாடு எட்டப்படலாம் என்றும் போர் நிறுத்தக் காலக்கெடுவுக்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் அதிரிக்கக்கூடும் என்றும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வந்தார்.
ட்ரம்ப் தனது கோரிக்கைகளைத் தளர்த்தும் வரை பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம் என்று ஈரான் வலியுறுத்திய போதிலும், துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான தனது பேச்சுவார்த்தைக் குழுவை இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்திற்கு அனுப்ப எதிர்பார்ப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டார்.
ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளரும் நாடாளுமன்ற சபாநாயகருமான மொஹமட் பாகர் காலிபாஃப், ஈரான் சரணடைய வேண்டும் என அமெரிக்கா விரும்புவதாகக் குற்றம் சாட்டியதுடன், அதற்கு மாறாக, “போர்க்களத்தில் புதிய வியூகங்களை வெளிப்படுத்த” ஈரான் தயாராகி வருவதாகவும் கூறினார்.
அத்துடன், அச்சுறுத்தல்களின் நிழலில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளை நாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் காலிபாஃப் இன்று அதிகாலையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதேநேரம், ஈரான் தனது நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ளும் வரை போரை முடிவுக்குக் கொண்டுவர தனக்கு எந்த அழுத்தமும் இல்லை என்று ட்ரம்ப் திங்களன்று வலியுறுத்தினார்.

