இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் 304 என்ற வெற்றி இலகை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 303 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரை, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க நிதானமாக விளையாடி 103 பந்துகளில் 79 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். அதிரடியாக விளையாடிய குசல் மெந்திஸ் 62 பந்துகளில் 72 ஓட்டங்களையும், அணியின் தலைவர் சரித் அசலங்க 44 பந்துகளில் 45 ஓட்டங்களையும் விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த உதவினர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் மத்யூ போர்ட் (Matthew Forde), ரோஸ்டன் சேஸ் (Roston Chase) மற்றும் ஜெய்டன் சீல்ஸ் (Jayden Seales) ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற வேண்டுமாயின் 50 ஓவர்களில் 304 ஓட்டங்களைப் பெற வேண்டும் என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி தனது பதிலடி இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளது.

