ஹோமாகம கட்டுவான தொழில்பேட்டையில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் கடுமையாக எரிகாயங்களுக்கு உள்ளாகியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கோட்டே தீயணைப்பு பிரிவின் முதன்மை கட்டளை அதிகாரி தெரிவிக்கையில், தீ விபத்து இன்று (21) காலை 09:45 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
3 மாடி கட்டிடம் முழுவதும் தீ பரவியுள்ளதுடன், ஆரம்பத்தில் மூன்று நபர்கள் தீயில் சிக்கியதாக கூறப்பட்ட போதிலும், மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது தீயில் கருகிய நிலையில் 5 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக அந்த தீயணைப்பு அதிகாரி ‘அத தெரண’ ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
அவர்களில் மூவர் அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் கருகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீ தீவிரமாக பரவியிருந்ததால், பாதிக்கப்பட்ட நபர்கள் சிக்கியிருந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்களால் உடனடியாகச் செல்வதில் சிரமம் ஏற்பட்டதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன், தற்போது தீ முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

