கிராண்பாஸ் பகுதியில் சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர், 2020 கொவிட் தொற்று காலப்பகுதியில் தம்பதியினரை படுகொலை செய்து, உடல் பாகங்களை கால்வாய் ஒன்றில் புதைத்த சம்பவத்தில் குற்றச்செயலுக்கு உதவி ஒத்தாசை புரிந்த சந்தேகநபர் ஒருவர் போதைப்பொருளுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு கிராண்ட்பாஸ், கம்பிகொட்டுவத்த பகுதியில் வசித்த சுனில் குமாரசிங்க மற்றும் அவரது மனைவியான குமுது டி சில்வா ஆகிய தம்பதியினர் காணாமல் போயிருந்தனர்.
இதுகுறித்த விசாரணையை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்தபோது, தனிப்பட்ட தகராறு காரணமாக அயல் வீட்டு தம்பதியினரால் இவர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளமை கடந்த மார்ச் மாதம் தெரியவந்தது.
நகைகளை கொள்ளையடித்து, உடல்களைத் துண்டங்களாக்கி கால்வாயில் புதைத்த குற்றச்சாட்டில் ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே, இக்குற்றச்செயலுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய மற்றுமொரு சந்தேகநபர், புதன்கிழமை (3) இரவு மீதொட்டமுல்ல புகையிரத வீதிக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டார்.
வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபர் கைதுசெய்யப்படும் போது, அவரிடமிருந்து 13 கிராம் 10 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

