வறட்சியான காலநிலையினையடுத்து மலையக நீர்த்தேக்கங்களுக்கு அருகில் நீரேந்தும் பிரதேசங்களிலுள்ள காட்டுப்பகுதிகளுக்கு இனந்தெரியாத விசமிகளால் தொடர்ச்சியாக தீ வைக்கப்பட்டு வருவதனால் பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளன.
காசல்ரீ நீர்த்தேகத்திற்கு கரையோர நீர் போசன பிரதேசமாக காணப்படும் வனராஜா கெந்தகொலை காட்டுப்பகுதிக்கு நேற்று இரவு இனந் தெரியாதவர்களால் தீ வைத்ததன் காரணமாக அப்பகுதியில் பல ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளன.
குறித்த காட்டுப்பகுதிக்கு தீ வைத்ததன் காரணமாக அப்பகுதியில் உள்ள நீர் ஊற்றுக்கள் அற்றுப்போவதுடன்,சிறிய வகை உயிரினங்கள்,எமது பிரதேசத்திற்கே உரித்தான அறிய வகை தாவரங்கள் ஆகியன அழிவடையும் நிலையினை எதிர்நோக்கியுள்ளன.
இந்நிலையில் தொடர்ச்சியாக வனப்பகுதிகளுக்கு தீ வைப்பதனால் இந்நிலை மேலும் அதிகரித்து நீரின்றி பல்வேறு பிரச்சினைக்கள் நேரிடலாம் என பிரதேச வாசிகள் சுட்டிக்காட்டுக்கின்றன. இதே நேரம் நீர் போசனை பிரதேசங்களில் உள்ள காட்டுப்பகுதிக்கு தீ வைப்பதனால் தேசிய மின் உற்பத்திப் பாதிப்புகள் ஏற்படலாம்.
எனவே காடுகளுக்கு தீ வைப்பவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்து வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்;. காட்டு மிருகங்களை வேட்டையாடுவதற்கும் பொழுது போக்குக்காகவும் காட்டுப்பகுதிகளுக்கு சில விசமிகளால் தீ வைக்கப்படுவதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
அதேவேளை வனப்பகுதிகளை இவ்வாறான விசமிகளிடமிருந்து பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்