யாழ் போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதியில் இயங்கும் சிற்றுண்டிச்சாலைக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்காகச் சென்ற 21 வயது இளம்பெண் ஒருவர் வைத்திய நிபுணரால் அவமானப்படுத்தப்பட்டதாக யாழ்ப்பாணக் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (17-06-2026) காலை சுமார் 7.30 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிற்றுண்டிச்சாலை உரிமையாளரின் மகளான இளம்பெண் மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலை வளாகத்திற்குள் நுழைந்த போது பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் (மருத்துவர்) அவரை இடைமறித்துத் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அவரது பெற்றோரையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்
அத்தோடு இளம்பெண் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் சாவியை (திறப்பை) மருத்துவர் எடுத்துச் சென்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண், அப்பகுதியில் சென்ற ஒருவரின் கைபேசியைப் பயன்படுத்திச் சம்பவத்தைத் தனது பெற்றோருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அவரது தந்தை மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றதுடன் பின்னர் குடும்பத்தினர் யாழ்ப்பாணக் காவல் நிலையத்திற்குச் சென்று சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர்.
உணவுப் பொருட்கள்
இதேவேளை குறித்த மோட்டார் சைக்கிள் சாவியை வைத்தியசாலை காவல் பிரிவிடம் ஒப்படைக்க முயற்சிக்கப்பட்டதாகவும் அதனை ஏற்க மறுத்த காவல்துறை பிரிவினர் வைத்தியசாலை பணிப்பாளர் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது மருத்துவருக்கும் வைத்தியசாலை காவல்துறை பிரிவினருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இவ்விடயம் தொடர்பாக வைத்தியசாலை காவல்துறை பிரிவினர் தமது மேலதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.
குறித்த சிற்றுண்டிச்சாலை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயங்கி வருவதுடன் வைத்தியசாலை வளாகத்திற்குள் உணவுப் பொருட்களைக் கொண்டு வருவதற்கான முன் அனுமதி நிர்வாகத்திடமிருந்து பெற்றுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மாலை வேளையிலும் சிற்றுண்டி வழங்கச் சென்ற உரிமையாளருடன் மீண்டும் முரண்பாடு ஏற்பட்டதாகவும் அதில் மற்றொரு வைத்திய நிபுணரும் உடனிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் குறித்த வைத்திய நிபுணர் வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் அடிக்கடி முரண்பாடுகளில் ஈடுபடுவதாகவும் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எனினும் இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட வைத்தியர்களின் பதில் இதுவரை கிடைக்கவில்லை.
சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு உண்மை நிலையை வெளிக்கொணருமாறு பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

