இலங்கையில் மிகபிரசித்தி பெற்ற இடமான சிகிரியா ஆசியாவிலுள்ள தொல்பொருளியல் சார்ந்த இடங்களில் ஒன்று என்பதுடன், உலக அருஞ் செல்வமாக இது 1982 இல் பிரகடனப்படுத்தப்பட்டது.
சிகிரியா காசியப்ப மன்னனின் (கி.பி. 477-495) நிர்மாணிப்பாகும். கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்குரிய காலத்தில் அரண்மனை வாசஸ்தலமாகவும் கோட்டையாகவும் கட்டியெழுப்பப்பட்டது.
இருந்த போதிலும் சிகிரியாவின் வரலாறு அதனை விடவும் பழைமை வாய்ந்தது என்பதற்கு சிகிரியாக் குன்றின் அடிவாரத்தில் உள்ள கற்குகைகளில் காணப்படும் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் இருந்து இரண்டாம் நூற்றாண்டு வரையான காலத்துக்குரிய பிராமி அட்சரங்கள் சான்று பகர்கின்றன.
சுற்றுலா பயணிகள்
நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிகிரியா குன்றை பார்க்காமல் செல்வதில்லை. இந்நிலையில் சீகிரியா குன்றுக்கு ஏறுவதற்கு வெளிநாட்டவர் ஒருவரிடம் இருந்து 11000 ரூபா அறவிடப்படுவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக வெளிநாட்டவர்கள் பலர் சீகிரியா குன்றில் ஏறுவதை தவிர்த்து வருவதாக சீகிரிய பிரதேச சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை டிசம்பர் மாதம் சிறந்த சுற்றுலா மாதமாக இருந்தாலும் வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வரவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.