முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவு பகுதியில், தமது பூர்வீகக் காணிகளை மீளப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதுவரை உரிய தீர்வு எட்டப்படாத காரணத்தால், இன்று (05) காலை கேப்பாப்புலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு பேரணியாக சென்று தொடர் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலுக்கு முன்பாக நிறைவு பெற்றிருந்தது.
தமது காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதுடன் மக்களின் பயன்பாட்டிற்காக இருந்த பாடசாலை, ஆலயம், தேவாலயம் மற்றும் பொதுமண்டபம் ஆகியவற்றையும் இராணுவம் தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை உடனடியாக விடுவித்து, இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்களது சொந்த கிராமங்களில் மீள்குடியேற வழிவகுக்குமாறு அரசாங்கத்திடமும் ஆளுநரிடமும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பல ஆண்டுகளாக பல்வேறு அரசுகளிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், தங்களது காணிகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என கவலை வெளியிட்ட அவர்கள் தங்களது காணிகளும் பொதுச் சொத்துகளும் முழுமையாக மீள வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
குறித்த போராட்டத்தின் போது எமது நிலம் எமது உரிமை, நிலப்பறிப்பு என்பது அப்பட்டமான மனித உரிமை மீறல், இராணுவ நிலைகளினை அரச காணிகளினுள் உடனடியாக நகர்த்துங்கள், இராணுவமே வெளியேறு, எமது நிலம் எமக்கு வேண்டும், எமது வாழ்வாதாரம் எமக்கு வேண்டும், மூதாதையர் பூமி எமக்கு வேண்டும் போன்ற பல்வேறு வாசகங்களடங்கிய பதாதைகளை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டோர்
இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் வி.மணிவண்ணன், மக்கள் போராட்ட முன்னணி உறுப்பினர் (அரகல) ராஜ்குமார் ரஜீவ்காந், அரசியல் செயற்பாட்டாளர் எஸ்.தவபாலன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் ஞா.யூட்சன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.விஜிந்தன், முல்லைத்தீவு மாவட்ட தேசிய இளைஞர் சம்மேளன பிரதிநிதி, முன்னாள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், கேப்பாபுலவு மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கேப்பாப்புலவில் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகளை உடனடியாக உரிய மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

