ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சிறப்புத் தூதுக்குழு ஒன்று கலந்துகொள்ளவுள்ளது.
அலி கமேனியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் வெளிநாடுகளின் அதிகாரப்பூர்வ பட்டியலை ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
உலக அரசியல் அரங்கில் தீவிர கவனத்தை ஈர்த்துள்ள இந்த இறுதிச் சடங்கில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல உயர்மட்டத் தூதர்கள் கலந்துகொள்வார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ தகவல்
ஈரான் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையில், இந்நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து 30 இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் குழுக்கள் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனடிப்படையில், ஆசிய மற்றும் ஐரோப்பிய கண்டங்கள், ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்கப் பிராந்தியங்களைச் சேர்ந்த நாடுகளின் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள்.
அவர்களில் இலங்கை, சீனா, ரஷ்யா, இந்தியா, கியூபா, நிகரகுவா, காங்கோ குடியரசு, காம்பியா மற்றும் தஜிகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் அரசியல் தலைவர்கள் மற்றும் தூதர்களும் இடம்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சிறப்புத் தூதுக்குழு இந்த ராஜதந்திர இறுதி அஞ்சலி விழாவில் பங்கேற்க உள்ளது.
அதன்படி இந்நிகழ்வில் நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூஃப் ஹக்கீம் ஆகியோர் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

