குழந்தைகளின் உலகம் எப்போதும் கள்ளங்கபாடற்றதும் அலாதியான அழகுடையதுமாகும். அந்த அழகான உலகை மேலும் அழகாக்கிய நம் நாட்டுச் சிறுமி ஒருவரை இன்று உலகமே நேசிக்கிறது.
கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்கள் வாயிலாக சர்வதேச அளவிலும் கூட பெரும் கவனத்தை ஈர்த்து, மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களை நெகிழ வைத்தது, இலங்கையைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கும் அவளது செல்லப் பிராணியான முள்ளம்பன்றிக்கும் இடையிலான அபூர்வ பாசப் பிணைப்பாகும்.
ஆரம்பத்தில் இந்தத் காணொளி, இது பங்களாதேஷில் நடந்த ஒரு சம்பவம் எனக் குறிப்பிடப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டது. அக்காணொளியில், வயல்வெளிக்கு நடுவே ஒரு சிறுமி நடந்து செல்வதைக் காண முடிந்தது.
அவளுக்குப் பின்னால் எவ்வித பயமும் சந்தேகமும் இன்றி, மிகுந்த பாசத்துடன் ஒரு குட்டி முள்ளம்பன்றியும் ஓடிச் சென்றது.
உலக மக்கள் அனைவரும் இவர் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த சிறுமி என்று நினைத்தே இக்காணொளியை அன்போடு பகிர்ந்தனர்.
எவ்வாறாயினும், உண்மைத் தகவல்கள் வெளிவந்தபோதுதான், உலகையே வசீகரித்த இந்த விசித்திரமான பாசக் கதையின் நிஜமான சொந்தக்காரி நம் நாட்டுச் சிறுமி என்பதை உலகம் அறிந்துகொண்டது.
இந்தச் சிறுமியைத் தேடிச் சென்ற ‘அத தெரண’ ஊடகக் குழுவினருக்கு, வரலாற்றுச் சிறப்புமிக்க பொலன்னறுவையின் ’14 எள’ (14 ஆம் கால்வாய்) கிராமத்தில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
தற்போது தரம் 2 இல் கல்வி பயிலும் அச்சிறுமியின் பெயர் ஸ்ரேதா புன்சதி ஆகும். ஸ்ரேதாவைச் சந்திக்கச் சென்றபோதும், அவள் தனது செல்லப் பிராணிகள் சூழ அவளது அழகான உலகத்திலேயே மூழ்கியிருந்தாள்.
ஒரு நாள், இந்தக் குட்டி முள்ளம்பன்றி நாய்களின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி, காயமடைந்த நிலையில் ஸ்ரேதாவின் வீட்டிற்கு அருகில் வந்துள்ளது.
உடனடியாகச் செயற்பட்ட ஸ்ரேதாவும் அவளது குடும்பத்தினரும், அந்த அப்பாவி முள்ளம்பன்றியைப் பராமரித்து குணப்படுத்தியுள்ளனர்.
அன்றிலிருந்து இந்த குட்டி முள்ளம்பன்றி ஸ்ரேதாவின் குடும்பத்தில் மற்றுமொரு அன்பான உறுப்பினராக மாறிப்போயுள்ளது.

