பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இதுவரையில் 18,000க்கும் அதிகமான தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (27) மாலை வரையான காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் 18,129 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்தார்
சுகாதார வழிகாட்டல்களுக்கு இணங்க நாளை (29) மற்றும் நாளை மறுதினம் (30) நடத்தப்படும் தன்சல்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என அவர் வலியுறுத்தினார்.
பொசன் வலயங்களை மையமாகக் கொண்டு நடத்தப்படும் வர்த்தக நிலையங்கள் மற்றும் தற்காலிக வியாபார இடங்களை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் இந்த வாரம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இம்முறை அனுராதபுர புண்ணிய பூமியை மையமாகக் கொண்டு நேற்றைய (27) தினமாகும்போது 200க்கும் அதிகமான தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சமில் முத்துகுட குறிப்பிட்டார்.
அந்த நகரத்தை சூழவுள்ள பகுதிகளில் உணவு சுகாதாரம் மற்றும் தொற்றா நோய்களைத் தடுப்பது குறித்தான விசேட வேலைத்திட்டம் ஒன்று அனுராதபுர மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய தன்சல்களை நடத்தும் அமைப்பாளர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினால் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய அவர்கள் செயற்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட மேலும் வலியுறுத்தினார்

