மின்சார வலுசக்தியை நிலைப்படுத்துவதற்கும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்குமாக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட மின்கல சக்தி சேமிப்பு முறைமையின் கீழ், மேலும் ஏழு களஞ்சிய கட்டமைப்புகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த ஏழு சக்தி சேமிப்பு களஞ்சிய கட்டமைப்புகளும் பாணந்துறை, பெலியத்த, ஹம்பாந்தோட்டை, அம்பாறை, வவுணதீவு, வாழைச்சேனை மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளில் உள்ள மின்சாரப் பரிமாற்ற உப நிலையங்களுக்கு அருகில் நிறுவப்படவுள்ளன.
இந்த ஏழு மின்கல சக்தி சேமிப்பு கட்டமைப்புகளையும் பயன்படுத்தி 280 மெகாவோட் (MW) மின்சாரத்தைச் சேமிக்க முடிவதுடன், தினமும் 70 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் விநியோகக் கட்டமைப்புக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஜூன் மாத ஆரம்பத்தில் கொண்டுவரப்பட்ட 8 கட்டமைப்புகளை தெரிவு செய்யப்பட்ட உப நிலையங்களுக்கு அருகில் நிறுவும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள் ஜூலை மாத இறுதியில் நிறைவடைவதுடன், அதன் மூலம் 80 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின் விநியோகக் கட்டமைப்புக்கு வழங்க முடியும்.
குறித்த சேமிப்பு முறைமைகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவம் செய்யும் பொறுப்பு வலுசக்தி அமைச்சுக்குச் சொந்தமான தேசிய முறைமைச் செயற்பாட்டாளர் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுவதுடன், பராமரிப்புப் பணிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும்.

