ஆசிரியர்களின் பதவி உயர்வுகள், சம்பள முரண்பாடுகள் மற்றும் அநீதியான இடமாற்றங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வு வழங்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு பிரதமர் மற்றும் கல்வி அதிகாரிகளுடன் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்றை கொழும்பில் நடத்தியுள்ளது
முன்வைக்கப்பட்ட 8 முக்கிய கோரிக்கைகள்
ஆசிரியர்களின் பதவி உயர்வுகள், வலய மட்ட செயல் சான்றிதழ் சிக்கல்கள் மற்றும் 3/2 சம்பள முரண்பாட்டு உயர்வைப் பெற்றுக்கொள்வது உள்ளிட்ட 8 முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காகவே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நீடித்த இக்கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,
“கடந்த 2021ஆம் ஆண்டு முதல் ஆசிரியர்களின் பதவி உயர்வுப் பிரச்சினைக்கு முறையான தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை.
தற்போதைய அரசாங்கம் பதவியேற்று ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், பரீட்சை முறைகள் மற்றும் வலய மட்ட செயல் சான்றிதழ் அறிக்கைகளில் நிலவும் குளறுபடிகளால் ஆசிரியர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், மாகாண ஆளுநர்களின் தன்னிச்சையான செயல்பாடுகள் கல்வித்துறையைச் சீரழித்து வருகின்றன.
அநீதியான முறையில் ஆசிரியர்கள் இடமாற்றம்
குறிப்பாக, வடக்கு மாகாணத்தில் இடமாற்றச் சபையின் அனுமதியின்றி, ஆளுநரின் தன்னிச்சையான அதிகாரப் பிரயோகத்தின் மூலம் 125 ஆசிரியர்கள் அநீதியான முறையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறித்து பிரதமரின் கவனத்திற்குக்கொண்டு சென்றுள்ளோம்.
பாடசாலை மட்டங்களில் அதிபர், ஆசிரியர் இடமாற்றங்கள் மற்றும் மாணவர் சேர்க்கை விவகாரங்களில் அதிகாரிகள் எவ்வித தீர்க்கமான முடிவுகளையும் எடுக்காமல் மெத்தனப்போக்கை கடைப்பிடித்து வருகின்றனர்.
எனவே, நடப்பு ஜூன் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் எங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிட்டால், ஜூன் 30 ஆம் திகதிக்குப் பின்னர் நாடு தழுவிய ரீதியில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்குவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை என்று ஜோசப் ஸ்டாலின் எச்சரித்தார்.
இக்கலந்துரையாடலில் வண. மஹிந்தவங்ச தேரர், யல்வெல பஞ்ஞாசேகர தேரர் உள்ளிட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

