வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முதல் வடகீழ்ப் பருவத்தில் நிகழும் இடி மின்னல் மழை தொடங்கும் என யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
நண்பகலை அண்மித்து அல்லது மாலை அல்லது இரவில் இந்த மழை கிடைக்கும். ஆனால் ஒரே நாளில் அல்லது ஒரே நேரத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் கிடைக்காது. குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே கிடைக்கும்.
ஆனால் எதிர்வரும் 6 ஆம் திகதிக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் இந்த இடி மின்னல் மழை கிடைத்துவிடும்.
மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் மானாவாரியான மழையை மட்டும் அடிப்படையாகக் கொண்ட பல வயல்கள் நீரின்றி பாதிப்படைவதாக பலர் கூறியுள்ளனர். அவர்களுக்கு இந்த மழை வரமாக அமையும்.
இந்த முன்னறிவிப்பின் அடிப்படையில் மழை கிடைக்கும் என நம்பி மழைநீரை மட்டும் அடிப்படையாகக் கொண்ட வயல்களுக்கு மருந்து மற்றும் உரமிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். மழை கிடைத்ததன் பின்னர் இதனை மேற்கொள்ளலாம். ஏனெனில் எதிர்வரும் 06 ஆம் திகதி வரையான மழை இடி மின்னல் மழை என்பதனால் நாள், நேரம் மற்றும் இடத்தினை உறுதிப்படுத்த முடியாது.
அதேவேளை இன்றைய தினம் முதலாம் திகதி மத்திய கிழக்கு வங்காள விரிகுடாவில் புதிய காற்றுச்சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து பங்களாதேஷில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் எதிர்வரும் 06 ஆம் திகதி அன்று தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு தாழமுக்கமும் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து கிழக்கு கரையை அண்மித்து கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்குறித்த இரண்டில் ஏதாவது ஒன்று புயலாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு புயலாக மாறினால் அதற்கு ‘சென்வார்’ என பெயரிடப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்.

