இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் தாய்லாந்திற்குள் விசா இன்றி பயணிக்கும் சலுகையை இழக்கவுள்ளதாகத் தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
தாய்லாந்து வெளியுறவு அமைச்சு ஆகஸ்ட் 31ஆம் திகதியன்று வெளியிட்ட புதிய உத்தரவின்படி, இலங்கை உட்பட 21 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த ‘விசா விலக்கு சலுகை’ முற்றிலுமாக இரத்து செய்யப்படுகிறது.
விசா விலக்கு சலுகை முற்றிலுமாக இரத்து
இதன்படி, இனி தாய்லாந்திற்குப் பயணம் செய்யும் இலங்கை குடிமக்கள் பயணத்திற்கு முன்னதாகவே தகுந்த விசாவைப் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து பயணத்திற்கான விசாவிற்கு இணையவழி (E-Visa) மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகம், நேரடியாக நேரில் வந்து சமர்ப்பிக்கப்படும் விசா விண்ணப்பங்களை ஏற்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் (14 வரை) தாய்லாந்திற்குள் பிரவேசிக்கும் இலங்கை பயணிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 60 நாட்கள் வரை அங்கு தங்கியிருக்க அனுமதி அளிக்கப்படும்.
தேசிய பாதுகாப்பு, சுற்றுலா, பொருளாதார நலன்கள் மற்றும் பரஸ்பர விசா நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு தாய்லாந்து அமைச்சரவையால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

