தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராகப் பதவி வகித்த காலத்தில், பேருந்துகளுக்கான வழித்தட அனுமதிப்பத்திரங்களைச் சட்டவிரோதமாக வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் விதிகளுக்கும், 2014.09.19 ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானத்தின் பரிந்துரைகளுக்கும் முரணாக, தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்காக 56 பயணிகள் சேவை அனுமதிப்பத்திரங்களை சட்டபூர்வ நடைமுறைகளுக்கு அப்பால், வருடாந்தக் கட்டணங்களை ஒரே தடவையில் அறவிடாமல் வழங்கியமையே முன்னாள் தலைவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும்.
இதற்கமைய, சந்தேகநபர் இன்று (17) காலை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

