செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய ஆளுகைக் கட்டமைப்பை வடிவமைப்பதில், வளரும் நாடுகளுக்கும் சமமான குரல் இருக்க வேண்டும் என்று டிஜிட்டல் பொருளாதாரப் பிரதி அமைச்சர் பொறியாளர் எரங்கா வீரரத்ன தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஷாங்காயில் நடைபெறவுள்ள 2026 உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டை (WAIC) முன்னிட்டு, “பிரகாசமான எதிர்காலத்திற்கான செயற்கை நுண்ணறிவுப் பங்களிப்பு” என்ற கருப்பொருளில் நடைபெற்ற தூதரக மாநாட்டில் உரையாற்றியபோது பிரதி அமைச்சர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். Maps
தற்போது உலகெங்கிலும் உள்ள பொதுச் சேவைகள் மற்றும் பொருளாதாரங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், அதன் உலகளாவிய ஆளுகைச் சட்டங்களை வகுக்கும் முடிவெடுக்கும் செயல்பாட்டில் வளரும் நாடுகளுக்கும் சமமான குரல் இருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர் தெற்கு அரைக்கோள நாடுகளுக்குத் தெரிவிப்பதன் மூலம் அல்லாமல், அந்த நாடுகளை முடிவெடுக்கும் மேசைக்குக் கொண்டு வருவதன் மூலமே உலகளாவிய செயற்கை நுண்ணறிவு ஆளுகை வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக DIGIECON 2030 தேசிய டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தின் மூலம், பொறுப்பான செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டிற்காக இலங்கை ஒரு வலுவான டிஜிட்டல் அடித்தளத்தையும் இறையாண்மை டிஜிட்டல் உள்கட்டமைப்பையும் கட்டமைத்து வருவதாக அவர் கூறினார்.
பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவுச் சேவைகளுக்கான அடித்தளமாக விளங்கும் இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள (SLUDI) தளம் நிறுவப்பட்டுள்ளதாகவும், விரைவில் நிறுவப்படவுள்ள தேசிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் மூலம் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி, நெறிமுறைகள் மற்றும் கொள்கைகளில் உள்ளூர் திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், உலகளாவிய ஊடாடும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுடன் இணையும் அதே வேளையில், நாடுகள் தங்கள் தரவுகளையும் டிஜிட்டல் உள்கட்டமைப்பையும் கட்டுப்படுத்தும் உரிமையைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு குறித்த உலகளாவிய சட்டங்கள் அர்த்தமுள்ளதாக இருக்க, வளரும் நாடுகளுக்கு அந்தச் சட்டங்களைச் செயல்படுத்தத் தேவையான தொழில்நுட்பத் திறன் வழங்கப்பட வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் எரங்கா வீரரத்ன கூறினார்.
இந்த நிகழ்வில், இலங்கையின் சார்பில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சகத்தின் ஆலோசகரான சுமுது ரத்நாயக்க உள்ளிட்ட பிராந்திய நாடுகளின் தூதரகப் பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

