இன்று முதல் கொள்கலன் போக்குவரத்து கட்டணங்களை 5% இனால் அதிகரிப்பதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள, இன்று முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தங்கள் காரணமாக டீசல் விலை சுமார் 25 ரூபாவினால் அதிகரித்துள்ளதாகவும், அதனுடன் இணைந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளும் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மசகு எண்ணெய், டயர்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட போக்குவரத்துத் துறைக்கு அவசியமான பொருட்களின் விலை உயர்வு மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாகவே இந்தக் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ளத் தீர்மானித்ததாக அவர் கூறினார்.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் துறையின் தொடர்ச்சியான செயல்பாடுகளைப் பேணுவதற்கு கொள்கலன் போக்குவரத்து வாகனங்களை முறையாகப் பராமரிப்பது அத்தியாவசியமானது என்றும், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் அந்தச் செலவுகளும் அதிகரித்துள்ளதாக சனத் மஞ்சுள மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய, கொள்கலன் போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்கள் இன்று முதல் 5 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன.
மேலும் கருத்துத் தெரிவித்த கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள,
“கடந்த நாட்களில் ஏற்பட்ட எரிபொருள் விலை திருத்தங்களுடன் ஒட்டுமொத்தமாக டீசல் விலை சுமார் 25 ரூபாவினால் அதிகரித்தது. அதோடு சேர்த்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளும் உயர்ந்தன. அது எங்களது போக்குவரத்துத் துறையைப் பாதித்தது. ஏனெனில், தற்போது எங்களது வாகனங்களின் அனைத்து உதிரிப்பாகங்கள், குறிப்பாக மசகு எண்ணெய் விலை, டயர்களின் விலை மற்றும் உதிரிப்பாகங்களின் விலைகள் மிக வேகமாக அதிகரித்துள்ளன. இவை அனைத்திற்கும் மேலாக, குறிப்பாக இந்த எரிபொருள் விலை உயர்வு எங்களது போக்குவரத்துத் துறையை கடுமையாகப் பாதித்துள்ளது.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் துறையைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த லொறி வாகனங்களின் பராமரிப்புச் சேவைகளை நிச்சயமாகப் பேண வேண்டும். ஏனெனில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையுடன் பராமரிப்புச் சேவைக்கான செலவுகளும் கூட அதிகரித்துள்ளன. இந்த அனைத்துக் காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டே நாங்கள் இந்த விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.

