உலகச் சிறந்த தடகள வீரர்கள் பங்கேற்கும், ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெறும் ‘உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப்’ (World Athletics Ultimate Championship) தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில், இலங்கையின் ருமேஷ் தரங்க இன்று (13) களம் இறங்குகிறார்.
இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 9.40 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
உலகின் முதன்மை ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க, இந்த ஆண்டில் 92.62 மீற்றர் தூரம் எறிந்து உலகச் சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் ‘டைமண்ட் லீக்’ ஈட்டி எறிதல் சாம்பியன் பட்டத்தை வென்ற ருமேஷிற்கு, ஜெர்மனியின் ஜூலியன் வெபர் (Julian Weber) முக்கிய சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப்பில் 90.4 மீற்றர் தூரம் எறிந்து புதிய போட்டிச் சாதனையைப் படைத்திருந்தார்.
இவர்களைத் தவிர, ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் மற்றும் டிரினிடாட் & டொபாகோவின் கெஷோர்ன் வால்காட் உள்ளிட்ட உலகின் முன்னணி வீரர்கள் பலரும் இன்றைய போட்டியில் பங்கேற்கின்றனர்.
உலகத் தரவரிசையில் முன்னிலையில் உள்ளவர்கள், ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் மற்றும் டயமண்ட் லீக் போன்ற தொடர்களில் வெற்றி பெற்ற சிறந்த வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும் இத்தொடர் கடந்த 11 ஆம் திகதி தொடங்கியதுடன், இன்று இதன் இறுதி நாளாகும்.
இத்தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெறும் வீரர் அல்லது வீராங்கனைக்கு 150,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படும்.
மேலும், 2 ஆம் இடம் முதல் 8 ஆம் இடம் வரை பெறும் வீரர்களுக்கும் பணப்பரிசுகள் வழங்கப்படுவதுடன், 8 ஆம் இடம் பெறும் வீரருக்கு 10,000 அமெரிக்க டொலர்கள் பரிசாகக் கிடைக்கவுள்ளது.

