உக்ரைனின் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் டஜன் கணக்கான ஏவுகணைத் தாக்குதல்களில், சுமார் 21 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நகரின் மையப்பகுதி அதிர்ந்ததாக கூறப்படும் இந்த தாக்குதலில் சுமார் 130 கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குண்டுவெடிப்புத் தங்குமிடங்களுக்கும் நிலத்தடி மெட்ரோ நிலையங்களுக்கும் தஞ்சம் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது.
74 ஏவுகணைகள் – 496 ட்ரோன்கள்
ஐந்தாவது ஆண்டாகத் தொடரும் இந்தப்போரில், தலைநகரின் பெரும்பாலான பகுதிகளில் இவ்வளவு பெரிய அளவிலான அழிவு ஏற்பட்டது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது
இதன்போது, ஒரே இரவில் ரஷ்யா 74 ஏவுகணைகளையும் 496 ட்ரோன்களையும் ஏவியதாக உக்ரேனிய விமானப்படை தெரிவித்துள்ளது.
இதில் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்ததாலும், உக்ரைனிடம் பேட்ரியாட் ஏவுகணைகளின் பற்றாக்குறை நிலவுவதாலும், அவற்றை இடைமறித்து அழிக்கும் வீதம் மிகவும் குறைவாகவே இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து தனது அயர்லாந்து பயணத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு அவசரமாகத் திரும்பிய உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, கடுமையாகச் சேதமடைந்த ஒன்பது மாடிக் குடியிருப்புப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இந்நிலையில், நட்பு நாடுகள் தங்களுக்கு வாக்குறுதி அளித்த வான் பாதுகாப்பு ஆயுதங்களை உரிய நேரத்தில் வழங்கத் தவறியதே இந்த உயிர்ச்சேதங்களுக்கும் அழிவுகளுக்கும் காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

