நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ‘அஸ்வெசும’ நலன்புரி நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த இருவரையும் இன்று (25) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே சந்தேகநபர்கள் இருவருக்கும் பிணை வழங்குமாறு அவர்களது சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.
எனினும், ஹட்டன் விசேட குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பிணை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, ஹட்டன் மாவட்ட நீதிபதி இருவரையும் செப்டம்பர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
‘அஸ்வெசும’ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை உரிய பயனாளிகளுக்கு வழங்காமல், முறைகேடாக அவர்களது உறவினர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்ததாக நோர்வூட் பிரதேச செயலாளரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவின் ஆலோசனை மற்றும் ஹட்டன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிஷாங்க கொடமுன்னவின் மேற்பார்வையில், ஹட்டன் பொலிஸாரின் விசேட விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

