யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களின் விடுதிக்குள் நுழைந்த சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்து நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த சாவகச்சேரி பொலிஸார் வைத்தியசாலை விடுதி அறைக்கு வெளியே வைத்தியரை அழைத்தபோதும், வைத்தியர் வெளியே வராததால் சந்தேகமடைந்த பொலிஸார் விடுதி அறையை உடைத்து உள்ளே சென்றனர்.
இந்நிலையில் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் அங்கு சென்ற பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து சம்பவ இடத்தில் நின்ற மு.தம்பிராசாவையும், காணொளியை எடுக்க முயன்ற இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
சாவகச்சேரி பொலிஸார் விசாரணைக்கு பின்னர் மூவரையும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தினர்.
விசாரணைகளை மேற்கொண்ட நீதிவான் அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசாவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் ஏனைய இருவரையும் பிணையில் விடுவித்து உத்தரவிட்டார்.