வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் கொவிட்-19 தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 1ம் திகதி ஆரம்பமாகும் என மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
வடமாகாணம் முழுவதும் 108 தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு முன்னாயத்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
5 மாவட்டங்களிலும் தடுப்பூசி பெறவுள்ளவர்களுக்கான பட்டியல் தயாரிக்கும் பணி பிரதேச செயலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலின் பிரகாரம் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதி இந்த பணிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், மக்கள் யாரும் அச்சமடையவேண்டிய அவசியமில்லை என்றும் மாகாணத்தில் 85 வீதத்திற்கும் அதிகமான சுகாதார துறையினர் தடுப்பூசிகளை ஏற்றியுள்ளனர்.
அவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் விசேடமாக பாலுாட்டும் தாய்மார், கர்ப்பவதி பெண்கள் தவிர்ந்த சகலரும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம் என்றும் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.