முல்லைத்தீவில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, சிறார்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி இன்று (27) பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டதுடன், 2026ஆம் ஆண்டுக்கான சிறுவர் பாதுகாப்பு மாநாடும் நடைபெற்றுள்ளது.
“எதிர்கால தலைவர்களைக் கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வுகள், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மதுரம், விக்ரி ஜெனரேஷன், ஷாறிபாத், ஹார்மெல் மற்றும் ப்லோமிங் ஆகிய சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றன.
சிறார்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்திய பேரணி, முல்லைத்தீவு பேருந்து நிலைய வளாகத்திலிருந்து ஆரம்பமாகி முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் வரை இடம்பெற்றது.
இதன்போது சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பங்கேற்பாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.
பேரணியின் நிறைவில், சிறார்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு கோரி முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நகரிலுள்ள கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் 2026ஆம் ஆண்டுக்கான சிறுவர் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் பிரதிநிதிகள், சிறுவர் பாதுகாப்புப் பொலிஸ் அதிகாரிகள், சிறார்கள் மற்றும் பெருமளவான பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

