தமிழ்நாடு தர்மபுரியில் கடன் தொல்லையால் மனைவி, மகளை கொலை செய்து விட்டு ஓடும் லாரியில் பாய்ந்து தொழிலதிபர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளதாவது,
தர்மபுரி கோட்டை கோயில் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சந்தோஷ் (45). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சரண்யா (35). மகள் சாத்விகா (14),
தீவிர விசாரணையில், திடுக்கிடும் தகவல்
நேற்று காலை சரண்யாவிற்கு, அவரது பெற்றோர் போன் செய்தபோது அவர் எடுக்கவில்லை. இதையடுத்து, நேரில் வந்து பார்த்தபோது, சரண்யா மற்றும் சாத்விகா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். அதிர்ச்சிக்குள்ளான அவர்கள், சந்தோஷை தேடினர். அவருக்கு போன் போட்டும் எடுக்கவில்லை.
தகவலறிந்து வந்த தர்மபுரி டவுன் போலீசார் விசாரித்துக் கொண்டிருந்த நிலையில் தர்மபுரி அருகே புறவடை பகுதியில் லாரி முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், அது சந்தோஷ் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், திடுக்கிடும் தகவல் வெளியானது. சந்தோஷ் ரியல் எஸ்டேட் தொழிலுடன் பங்குசந்தை மற்றும் ஆன்லைன் டிரேடிங்கும் செய்து வந்துள்ளார். இதில் அதிகளவில் கடன் ஏற்பட்டதால், கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் அடமானம் வைத்த நகைகளையும் மீட்க முடியவில்லை. கடன் சுமை மேலும் அதிகரித்ததால் தற்கொலை செய்ய முடிவு செய்தார். தான் போனபிறகு மனைவியும், மகளும் கடன் தொல்லையால் சிரமப்படக் கூடாது என நினைத்து இருவரையும் கொல்ல திட்டமிட்டுள்ளார்.
மனைவியை பாத்ரூம் அழைத்து சென்று, சரமாரியாக தாக்கி கழுத்தை நெரித்ததில் துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், மகள் படிக்கும் பள்ளிக்கு சென்று தாத்தா இறந்து விட்டதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீடு திரும்பிய சாத்விகா தாய் எங்கே என கேட்டுள்ளார். திடீரென அவர் சுத்தியலால் பலமாக மகளை தாக்கியதில் மகளும் உயிரிழந்தார்.
இதனையடுத்து சந்தோஷ் லாரியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் கடன் தொல்லையால் குடும்பமே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

