இசைஞானி இளையராஜா இசையமைத்த ‘அன்னக்கிளி’, ’16 வயதினிலே’, ‘முள்ளும் மலரும்’ உள்ளிட்ட 134 திரைப்படங்களின் பாடல்கள் மீது அவர் தனிப்பட்ட முறையில் உரிமை கோர முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1976 முதல் 2001-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வெளியான 134 திரைப்படங்களின் பாடல்களை, அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ் மற்றும் ஜியோ சாவன் போன்ற தளங்களில் இளையராஜா பதிவேற்றியிருந்தார்.
உரிமை கோர முடியாது
அந்தப் பாடல்கள் மீது தான் உரிமை கோரியதையும் எதிர்த்து, ‘சரிகம இந்தியா லிமிடெட்’ (Saregama India Limited) நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துஷார் ராவ் கெடேலா, சரிகம நிறுவனத்திற்குச் சாதகமான இடைக்காலத் தடையை நீட்டிக்க உத்தரவிட்டார்.
இந்தியக் காப்புரிமைச் சட்டம் 1957-ன்படி, ஒரு தயாரிப்பாளர் இசையமைப்பாளருக்கு ஊதியம் வழங்கி இசையை உருவாக்கும்போது, அந்தப் படைப்பின் முதல் உரிமையாளர் தயாரிப்பாளரே ஆவார்.
தயாரிப்பாளர்கள் தங்களுக்கு அந்த உரிமையை வழங்கியுள்ளதால், இளையராஜா அதன் மீது உரிமை கோர முடியாது என்று சரிகம தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இடைக்காலத் தடையை நீக்க இளையராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம், இந்த வழக்கு முடியும் வரை அந்த 134 படங்களின் பாடல்களை இளையராஜா வணிக ரீதியாகப் பயன்படுத்த முடியாது என்பது உறுதியாகியுள்ளது.

