‘தற்போதுள்ள ஆபத்தான மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பாடசாலைகளில் விழாக்கள் மற்றும் வைபவங்களை நடத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கல்வியமைச்சின் செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கொவிட்-19 தொற்றுநோயின் ஆபத்துகள் மற்றும் பாதுகாப்பின்மை காணப்படுகின்ற நிலையிலும், சில பாடசாலைகள் பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதையும், அதற்கான நடவடிக்கைகளை ஒழுங்கு செய்கின்றமை தொடர்பிலும், தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் உள்ளிட்ட முழு பாடசாலை சமூகத்தினதும் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் மிகப் பொறுப்புடனும் விழிப்புடனும் அணுகுமுறையை எடுக்க வேண்டிய நேரம் இது என, பேராசிரியர் கபில பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய, மறு அறிவித்தல் வரும் வரை, அனைத்து பாடசாலை செயல்பாடுகளையும் இடைநிறுத்திவைக்குமாறு, அறிவுறுத்தல் கடிதமொன்றை கல்வியமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளதாக, அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய, ஏதேனும் பாடசாலை நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளதாயின் அவ்வாறான அநைத்து நிகழ்வுகளையும், அவ்வாறு வரும் நாட்களில் திட்டமிட்டுள்ள நிகழ்வுகளையும் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தி வைப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு, கல்வியமைச்சின் செயலாளர் குறித்த கடிதத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.