ஹொரணையில் அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் காணாமல்போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வங்கியின் உதவி முகாமையாளர் இன்று (07) குறித்த வங்கிக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
தற்போது அங்கு பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் அவர் மில்லனிய பகுதிக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கியின் சி.சி.டி.வி காட்சிகள் பரிசோதனை
இதற்கமைய, வங்கியின் சி.சி.டி.வி காட்சிகளை பரிசோதித்த போது, வங்கியின் உதவி முகாமையாளர் அன்றைய தினம் காலையில் வங்கியின் பாதுகாப்பு அறையிலிருந்து பணத்தை எடுக்கும் காட்சி பதிவாகியிருந்தது.
வங்கிக்கு வெளியே வரும் பகுதியில் எந்தவொரு சி.சி.டி.வி கமராவும் பொருத்தப்பட்டிருக்கவில்லை என்பதுடன், சுற்றியுள்ள ஏனைய சி.சி.டி.வி கமராக்களைப் பரிசோதித்த விசாரணை அதிகாரிகளுக்கு, சந்தேகத்திற்கிடமான நபர் எவரும் பணப் பைகளை எடுத்துச்செல்லும் காட்சி தென்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து வங்கி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, பழைய பொருட்கள் போடப்படும் கொள்கலன் பெட்டி ஒன்றில் இருந்து 1,740,000 ரூபா பணம் விசாரணை அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான உதவி முகாமையாளர், பாதுகாப்பு உத்தியோகத்தரையும் தொடர்புபடுத்தி மிகவும் திட்டமிட்ட முறையில் இப்பணத்தைக் கொள்ளையடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
தொலைபேசி, வீடு சோதனை
சந்தேகநபரான உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தரின் தொலைபேசி அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்கும், வீடுகளைப் பரிசோதிப்பதற்கான சோதனை உத்தரவு ஒன்றையும் ஹொரணை பிரதான நீதவான் லக்மினி விதானகமகே உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வங்கியின் உதவி முகாமையாளர் வேவல, கங்கோட பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என்பதுடன், மற்றைய சந்தேகநபர் புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த உதவி முகாமையாளரை ஆறு நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு ஹொரணை நீதவான் நீதிமன்றம் நேற்று (06) அனுமதி வழங்கியிருந்தது.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
ஹொரணையில் உள்ள அரச வங்கி ஏடிஎம் (ATM ) இயந்திரத்தில் வைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட பணம் அடங்கிய பணப்பை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹொரணையில் உள்ள அரச வங்கி ஏடிஎம் (ATM ) இயந்திரத்தில் வைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட 3 கோடி ரூபாவிற்கும் அதிக பணம் அடங்கிய பணப்பையை (03) திகதி பிற்பகல் நபரொருவரால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
உதவி மேலாளர் மற்றும் ஒரு பாதுகாப்பு ஊழியர் கைது
சம்பவம் தொடர்பாக, வங்கியின் உதவி மேலாளர் மற்றும் ஒரு பாதுகாப்பு ஊழியர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வங்கியின் உதவி மேலாளருடன் பணப்பரிவர்த்தனைகள் செய்த நல்லுறுவ – மொதரவில பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பாணதுறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விசாரணையின் போது, சந்தேகிக்கப்படும் அந்த உதவி மேலாளர் முன்னர் நல்லுறுவ பகுதியில் உள்ள ஒரு அரச வங்கியில் பணியாற்றியதும், வட்டிக்கு பணம் கொடுப்பதாக அறியப்பட்ட ஒரு பெண்ணிடமிருந்து ரூ. 2.5 மில்லியன் பெற்றதும் தெரியவந்துள்ளது.
அந்த தொகைக்கு வட்டியுடன் ரூ. 7.2 மில்லியன் செலுத்தப்பட்டதாகவும், பின்னர் அவ்வப்போது கூடுதலாக ரூ. 1 மில்லியன் பெறப்பட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட்டிக்கு பணம் பெற்ற விவகாரம்
வங்கியிலிருந்து பணம் காணாமல்போவதற்கு முந்தைய நாள், சம்பந்தப்பட்ட பெண், தான் வட்டிக்கு வழங்கிய ரூ. 3.7 மில்லியனைத் திருப்பித்தருமாறு சந்தேகநபரிடம் குறுஞ்செய்தி மூலம் கோரியிருந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், நல்லுறுவ பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணிடமிருந்தும், இத்தாலியில் இருந்து நாட்டிற்கு வந்த ஒரு பெண்ணிடமிருந்தும் தலா 2.5 மில்லியன் ரூபாயும், மற்றொரு நபரிடமிருந்து 3.7 மில்லியன் ரூபாயும் பெறப்பட்டுள்ளது.
கடன் பணத்தை திருப்பித்தருமாறு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளமை தெரியவருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இதற்கிடையில், பணம் காணாமல்போன மறுநாள் சந்தேகநபரின் உதவி மேலாளர் மற்றொரு வங்கிக்கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாணதுறை குற்றப்புலனாய்வுப்பிரிவின் பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில், சம்பந்தப்பட்ட இரண்டு பெண்களிடமும் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

