ஆந்திராவில் பன்றி வியாபாரி தனது வீட்டில் சிறுகச் சிறுக சேமித்து வைத்திருந்த ரூ.5 இலட்சம் பணத்தை கரையான் அரித்து விட்டது.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மைலாவரம் பகுதியைச் சேர்ந்த பன்றி வியாபாரி ஜமாலய்யா. இவர் பன்றி வளர்ப்பு மற்றும் வியாபாரம் செய்து வருகிறார். ரூ.10 லட்சம் வரை சேமித்து ஒரு சிறிய வீட்டை சொந்தமாக கட்ட வேண்டும் என்பது இவருடைய நீண்ட நாள் கனவு.
இதற்காக பணத்தை சிறுகச் சிறுக சேமிக்கத் தொடங்கினார். படிப்பறிவு அவ்வளவாக இல்லாத காரணத்தினால், வங்கிக் கணக்கும் தொடங்கவில்லை. ஆதலால், வீட்டில் இருந்த பழைய இரும்பு பெட்டியில் பணத்தை சேமிக்கத் தொடங்கினார் ஜமாலய்யா. ஒரு மாதம் முன்புகூட அப்பெட்டியில் சிறிது பணத்தைப் போட்டுள்ளார். அதன் பிறகு சேமிக்கும் அளவுக்கு பணம் வரவில்லை.
இந்நிலையில், ஜமாலய்யாவுக்கு வியாபாரத்துக்காக ஒரு லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. யாரும் கடன் கொடுக்க முன்வராததால், தான் சேமித்து வைத்துள்ள பணத்தில் ஒரு லட்சம் எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தார். அதன்படி, வீட்டின் பரண் மீது வைத்திருந்த அந்த இரும்புப் பெட்டியை எடுத்துப் பார்த்த அவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. தான் சேமித்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் நோட்டுகளை கரையான் நாசமாக்கி இருந்ததைக் கண்டு செய்வதறியாது தவித்துப் போனார். அய்யோ பல ஆண்டுகளாக சிறுகச் சிறுக சேமித்து வைத்த பணம் எல்லாம் நாசமாய் போனதே என கதறி அழுதார். இவரின் அழுகுரலைக் கேட்டு ஓடி வந்த அவரது வீட்டாரும் அந்தப் பெட்டியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த தகவல் அக்கம்பக்கம் பரவியதுடன் காவல் நிலையம் வரை சென்றது. போலீஸாரும் ஜமாலய்யாவின் வீட்டுக்குச் சென்று அந்தப் பெட்டியை பார்வையிட்டனர். அனைத்து பணமும் சின்னாபின்னமாகி இருந்தன. போலீஸாரைப் பார்த்து, ஐயா எப்படியாவது எனக்கு உதவுங்கள் என ஜமாலய்யா கதறி அழுதார். இதைப் பார்த்து போலீஸாரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.