வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் -மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா இன்றையதினம் (11) வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதிகாலையில் முருகப்பெருமானுக்கு மூலஸ்தான பூஜை வழிபாடுகள், வசந்த மண்டப பூஜை வழிபாடுகள் என்பன இடம்பெற்றிருந்தன.
சோழ இளவரசி மருதப்புரவீகவல்லி குதிரை முகம் நீங்கிய அற்புத தலம்
அதனைத் தொடர்ந்து முருகப் பெருமான் பஞ்சரதமேறி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த திருக்காட்சியை காண்பதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் புலம்பெயர் தேசத்தவர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து முருகப் பெருமானை தரிசித்தனர்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மிகப்பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த சைவத் திருத்தலமாகும்.
குதிரை முகத்துடன் இருந்த சோழ இளவரசி மருதப்புரவீகவல்லி முருகப்பெருமானை வழிபட்டு தனது முகமாற்றம் நீங்கப் பெற்ற அற்புதத்தால் இத்தலம் ‘மாவிட்டபுரம்’ எனப் பெயர் பெற்றது.
அதேவேளை ஆடி அமாவாசை தினமான நாளையதினம் மாவை கந்தனுக்கு தீர்த்த உற்சபம் இடம்பெறவுள்ளது. யாழில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் முக்கிய இடமாக கீரிமலை தீர்த்தம் அமைந்துள்ளது.
இதற்காக நாளை லட்சக்காணக்கான மக்கள் கீரிமலை சென்று வழிபாடுகளை மேற்கொண்டு வருவது காலம் காலமாக கடைப்பிடித்து வரும் ஊர் மரபாகும்.

