மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் மேற்கொண்ட முறைப்பாடுக்கு அமைவாக பொலிஸாரால் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நம்பப்பட்டு வந்த நிலையில் விசாரணைகள் மந்தகதியில் இடம்பெற்றுள்ளமை இன்றைய நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிந்துஜாவின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று (19-11-2024) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பாக தான் குறித்த வழக்கு மன்னார் பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மன்னார் குற்றத்தடுப்பு பொலிஸார் மன்றில் தெரிவித்திருந்தனர்.
இதுவரை காலமும் மன்னார் மடு பொலிஸார் குறித்த வழக்கு விசாரணையை B வழக்காக பதிவு செய்யாது சாதாரண வழக்காக பதிவு செய்து விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்ட பெண் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி டெனிஸ்வரன் மற்றும் சர்மிலன் டயசின் கோரிக்கையை ஏற்று குறித்த வழக்கு தொடர்பிலான விசாரணையை துரிதப்படுத்தி 2 வார காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்குமாறும் மேலும், வழக்கை B அறிக்கையாக தாக்கல் செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த வழக்கு மேலதிக விசாரணைக்காக டிசம்பர் மாதம் 3 திகதி தவணையிடப்பட்டுள்ளதுடன் சில மாதங்களுக்கு முன் சிந்துஜாவின் விடயத்தில் தங்களை முன்னிறுத்தி விளம்பரம் தேடிய எவரும் வழக்கு விசாரணைக்கு வருகை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது