இலங்கையில் 34 வருடங்களாக புனரமைக்கப்படாத வீதி ஒன்று குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கண்டியின், திகன நியூ டவுன் – அளுத்வத்த வீதியில் உள்ள விஜயசிறிகம கூட்டுறவுச் சந்தியிலிருந்து அம்பகொட்டே சிறி புஸ்ராம விகாரை சந்தி வரையிலான 1 கிலோமீற்றர் நீளமான வீதியே மூன்று தசாப்தங்களாக புனரமைக்கப்படவில்லை.
1990 ஆம் ஆண்டு ஒரு தடவை மாத்திரமே அது புனரமைக்கப்பட்டுள்ளது.
மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கண்டி மாவட்டத்தை உள்ளடக்கிய பல்லேகல கம்-உடவ ஒருங்கிணைந்த கிராம அபிவிருத்தி திட்டத்தின் போது, அந்த புனரமைப்பு இடம்பெற்றது.
தற்போது அந்த வீதி பழுதடைந்துள்ளமையால், மக்களும், கர்ப்பிணித் தாய்மார்களும் சிரமத்துக்குள்ளாகி வருவதுடன், வியாபார நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
எனினும் இந்த வீதியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்றுக்கூறி, மாகாண சபை அதிகாரிகளால் இது புறக்கணிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் கூறுகின்றனர்.