2026-ஆம் ஆண்டின் முக்கிய விண்வெளி நிகழ்வுகளில் ஒன்றான ஆழ்ந்த பகுதி சந்திர கிரகணம் (Deep Partial Lunar Eclipse) ஆகஸ்ட் 28-ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிகழவுள்ளது.
இது நிலவின் 96 சதவீதத்திற்கும் அதிகமான பரப்பைப் பூமியின் அடர்ந்த நிழல் மூடுவதால், இந்நிகழ்வின் போது நிலவு சிவப்பு மற்றும் செம்பு நிறத்தில் தோன்றி ‘இரத்த நிலவு’ (Blood Moon) காட்சி அளிக்கும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து நேரடியாகக் காண முடியாது
இந்திய நேரப்படி (IST) ஆகஸ்ட் 28 காலை 6:53 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 12:32 மணி வரை இந்த கிரகண நிகழ்வு தொடரும். குறிப்பாகக் காலை 9:43 மணி அளவில் கிரகணம் அதன் உச்சக்கட்டத்தை எட்டும் என நாசா தரவுகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்தியாவில் இந்த நேரத்தில் பகல் பொழுதாக இருப்பதோடு நிலவு அடிவானத்திற்கு கீழே சென்றுவிடும் என்பதால், இந்தியாவிலிருந்து இதை நேரடியாகக் காண முடியாது.
இந்தச் சந்திர கிரகணம் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் மிகத் தெளிவாகக் காட்சி அளிக்கும்.
இந்தியாவில் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் நாசா மற்றும் சர்வதேச வானியல் அமைப்புகள் நடத்தும் இணைய நேரலைகள் (Live Streaming) மூலம் இந்த அரிய ‘பிளட் மூன்’ நிகழ்வைக் கண்டு களிக்கலாம்.
மேலும், ஆகஸ்ட் 28-ஆம் தேதி ரக்ஷா பந்தன் பண்டிகையுடன் இந்தச் சந்திர கிரகணம் இணைந்து வருவதால் பலருக்கும் ஆன்மீக சந்தேகங்கள் எழுந்துள்ளன.
ஆனால், இந்த கிரகணம் இந்தியாவில் தென்படாது என்பதால், பாரம்பரிய சாஸ்திர விதிகளின்படி ‘சுதக் காலம்’ (Sutak Kaal) இந்தியாவில் பொருந்தாது என்றும் ஜோதிட வல்லுநர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

