இலங்கை அரசாங்கத்தினால் வாராந்தம் வெளியிடப்படும் வர்த்தமானியின் படி நேற்றைய தினம் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் நான்கு வகையான வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்புக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நேற்று வெள்ளிக்கிழமை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியிலேயே இந்த வேலை வாய்ப்புக்கள் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, மதிப்பீட்டு முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்ப சேவைப் பிரிவில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் பதவிக்காக விண்ணப்பம் கோரியுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு திறந்த முறையில் இணைத்துக் கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இலங்கையின் நீதிச்சேவை ஆணைக்குழு, சில பிரதேசங்களில் நிலவும் ”காதி” பதவி வெற்றிடங்களுக்கு ஆட்களைச் சேர்த்துக்கொள்வதற்காக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் (அத்தியாயம் 115) கீழ் விண்ணப்பங்கள் கோரியுள்ளது.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு, ‘சட்ட அலுவலர்’ பதவிக்கு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. குறித்த ஆட்சேர்ப்பு திறந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் பதிவாளர் நாயகம் திணைக்களம், நாட்டின் பல பிரதேசங்களுக்குமான பிறப்பு, இறப்பு, மற்றும் விவாகப் பதிவாளர்களுக்கான பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.