ஆட்சியைப் பிடித்தவுடன் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதாக ஆரம்பத்தில் உறுதியளித்தவர்கள், தற்போது தேர்தல் பிரச்சாரங்களில் இருந்து காணாமல் போயுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவொரு தேர்தலையும் நடாத்துவதற்கான தகுதியோ அல்லது ஆளுமையோ இல்லை என்றும் டி.வி. சானக குறிப்பிட்டார்.
நாட்டின் முக்கிய தீர்மானங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் அமைச்சர்களால் அல்லது “பெலவத்தை கட்சி காரியாலயத்தின்” செயலாளராலேயே எடுக்கப்படுகின்றன என்பதை நாட்டின் மக்கள் தற்போது தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளனர் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல்களை மேலும் ஒத்திவைத்தல்
தற்போதைய அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை தேர்தல்களை மேலும் ஒத்திவைப்பதற்கான வழிகளையே தேடி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நிதிப் பற்றாக்குறை காரணமல்ல, சட்டச் சிக்கல்களே காரணம் என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருந்த கருத்தை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

