வெளிநாட்டில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் ‘பாணந்துறை சலிந்து’வின் மூளையாக செயற்பட்ட ‘அப்பா’ என்ற 27 வயதான திலான் சமீர கடந்த பத்தாம் திகதி விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
மொரட்டுவ, மோதர இசுருசிறி மாவத்தையில் போதைப்பொருள் கடத்தல் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அந்த பகுதியை சுற்றிவளைத்துள்ளனர்.
இரவு 10.25 மணியளவில் நடந்த சோதனையின் போது, நடந்த பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில், பல குற்றங்களுடன் தொடர்புடைய அப்பா என அழைக்கப்பட்ட திலான் சமீர சுடப்பட்டுள்ளார்.
காயங்களுடன் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தி வந்த பாணந்துறையைச் சேர்ந்த சாலிது என்பவரின் பிரதான அடியாள் என தெரியவந்துள்ளது.
இவர் மீது கொலை உள்ளிட்ட பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார், சாரதி ஒருவர் சுடப்பட்டமை, பாணந்துறையில் ஒருவர் T-56 ரக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டமை உள்ளிட்ட குற்றங்கள் இதிலடங்கும்.
உயிரிழந்தவர்களுடன் தங்கியிருந்த ஏழு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மொரட்டுவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 30 – 40 வயதுக்குட்பட்டவர்கள். சந்தேகநபர்கள் 7 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக மொரட்டுவ மோதர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.