உலகுக்கே ஒளிகொடுக்கும் சூரியனே! எங்கள் செல்வங்களை கண்டீரோ…! போன இடம் தெரியலயே.. இருக்கும் திசையும் தெரியலயே’’என காணாமல்போன மகனை தேடியலையும் தாயொருவர் கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இன்றைய தினம் வவுனியாவில் இடம்பெற்ற காணாமலாக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தில் தம் பிள்ளைகளின் புகைப்படங்களை கையில் ஏந்தியவாறு பலர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் தன் மகனின் புகைப்படத்தை கையில் ஏந்தியவாறு கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்க தள்ளாடும் முதுமையிலும் தன் காணாமலாக்கப்பட்ட மகனுக்காக போராடி கொண்டிருக்கின்றார் தாயொருவர்.
இந்த அன்னை தன் மகனை தொலைத்த வலியையும், தன் மகனை பிரிந்ததனாலும் தன்னை போன்ற உறவுகளை தொலைத்த சொந்தங்கள் படுகின்ற வேதனையையும் பாட்டாகப்பாடி அழுது கொண்டிருக்கின்றார்.
ஏனைய காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சுற்றி நின்று அழுதுகொண்டிருந்தார்கள். காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் வீதியிலே நின்று போராடுகின்றார்கள். தம் பிள்ளைகளை திருப்பி தரசொல்லியும் தங்கள் கடைசி காலமாவது அவர்களுடன் வாழ பிள்ளைகளை விடுவிக்க சொல்லியும் அழுது ஆர்ப்பரிக்கின்றார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறவோ அல்லது நீதிகளை பெற்றுக்கொடுக்கவோ எந்த அரசியல் தலைமைகளும் இல்லை. அவர்கள் கூக்குரல் போட்டு கதறியழுவதை எல்லாரும் கைகட்டி நின்று வேடிக்கை பார்க்கின்றார்களே தவிர அவர்களை கண்டுகொள்வதாய் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்துவிட்டது. ஆனால் உள்நாட்டு தமிழ் மக்களுக்கு இடையேயான யுத்தம் இன்னும் நிறைவடையவில்லை. யுத்தம் தொடங்கிய அன்று கதறியழுத எம் மக்கள் இன்றுவரை நடுவீதிகளிலே காணாமல்போன உறவுகளுக்காக கதறியழும் அவலநிலை தான் இன்னும் தொடர்கின்றது. இது எம் தமிழ் மக்கள் பெற்ற சாபமா? காணாமல் போனவர்களுக்கான நீதி எங்கே? பெற்ற பிள்ளையை, உடன் பிறந்த சகோதரங்களை, கணவன் மனைவியை, தந்தையை தொலைத்துவிட்டு பல தசாப்தங்களாக போராடுகின்றனர் . இவர்களுக்கான நியாயம் கிட்டுமா? அல்லது அவர்களின் கடைசி காலம் முடியும் வரை வீதியிலே நின்று நீதி கேட்டு மடிந்து போகும் சாபம் இன்னும் தொடருமா? என்றும் தெரிவித்துள்ளார்.