களுத்துறை தெற்கு ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (16) அதிகாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் தாயும் அவரது உறவினரான பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் தாயும் அவரது உறவினரான மகளும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். உடன் வந்த மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
கவனக்குறைவாக நடந்து சென்று கொண்டிருந்தபோது துயரம்
இன்று காலை 4.30 மணியளவில் இவர்கள் ரயில் பாதையில் கவனக்குறைவாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, மருதானையிலிருந்து காலி நோக்கி அதிவேகமாக வந்த ரயில் இவர்கள் மீது மோதியுள்ளது.
மதுகம பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், அவரது மகள் மற்றும் உறவினரான மகள் ஆகிய மூவரும் அனுராதபுரத்தில் நடைபெறும் மத நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக வந்துள்ளனர்.
அனுராதபுரம் செல்லும் ரயிலைப் பிடிப்பதற்காக, களுத்துறை தெற்கு ரயில் நிலையத்தின் வலது பக்கமாக நடைமேடையை நோக்கி ரயில் பாதையின் வழியே இவர்கள் நடந்து சென்றபோது இந்த துயரம் நிகழ்துள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் முதற்கட்டமாக தெற்கு களுத்துறை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன..சடலங்களை பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபத்து குறித்து களுத்துறை தெற்கு பொலிஸார் தீவிர மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

