யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கொம்மாந்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் ரூ.1 கோடியே 15 லட்சம் பணத்தை திருடியதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெருடாவிலைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் 19 வயது இளைஞர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் தலைமறைவு
மேலும், நெடுங்கேணியைச் சேர்ந்த மற்றொரு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணை மற்றும் சிசிடிவி காட்சிகளின் ஆய்வின் மூலம் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்
கடந்த 27ஆம் திகதி பகல் நேரத்தில், வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வீட்டின் புகைக்கூட்டை உடைத்து உள்ளே நுழைந்த இருவரும் திருட்டை மேற்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களில் ஒருவர் வல்லைச் சந்தியிலும் மற்றொருவர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியிலும் வைத்து கைது செய்யப்பட்டனர்.
மேலதிக விசாரணை
மேலதிக விசாரணைகளில், வீட்டில் அதிகளவு பணம் இருப்பதை கண்ட இருவரும் நெடுங்கேணியில் உள்ள நபருடன் வீடியோ அழைப்பின் மூலம் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்ததாகவும், அவர் முழுப் பணத்தையும் எடுத்துவருமாறு அறிவுறுத்தியதாகவும் சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் பணம் நெடுங்கேணிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள காணியொன்றில் புதைத்து வைக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் யாழ்ப்பாணம் திரும்பிய வேளையிலேயே இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாகியுள்ள நெடுங்கேணி நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்களிடமிருந்து ரூ.74 லட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களை நீதிமன்ற அனுமதியுடன் தடுப்புக்காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வல்வெட்டித்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

