யால சரணாலயத்திற்குள் விதிகளை மீறியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் 06 பேர் வனஜீவராசிகள் அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த குழுவினர் இன்று(26) திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை 33 ஜீப்களில் சுமார் 100 பேருடன் யால சரணாலயத்திற்குள் நுழைந்துள்ளனர். இவர்கள் யால சரணாலயத்தில் ஜீப் வண்டிகளில் பயணித்த விதம் தொடர்பான பல காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியானதையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினால் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
CCTV காணொளிகள்
இந்த சம்பவம் தொடர்பில் CCTV காணொளிகள் மற்றும் காணொளி காட்சிகள் மூலம் வனவிலங்கு சட்டமீறல்கள் இடம்பெற்றுள்ளமை குறித்து உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர், இது தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.
மேலும் அந்த குழுவினருடன் சென்ற வனவிலங்கு அதிகாரி மற்றும் 6 தன்னார்வ வழிகாட்டிகளிடமும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.