மொஹமட் கஸாலி ஜெயின் கொழும்பின் பிரதான வீதியில் 18 வருடங்களாக தன் குடும்பத்துக்காக யாசகம் பெற்று வாழ்க்கையை மிகுந்த போராட்டத்துக்கு மத்தியில் கொண்டு சென்றுள்ளார்.
இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
வத்தளை பிரதேசத்திற்கு அருகில் ஹுனுப்பிட்டிய ,வெடிகந்த பகுதியில் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்துவரும் மொஹமட் கஸாலி ஜெயின் ஒவ்வொரு நாளும் பல இன்னல்களை எதிர் நோக்கி வந்துள்ளார்.
பல வருடங்களுக்கு முன் அனைவரையும் போன்று சாதாரணமாக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து தன் குடும்பத்தை வழிநடத்தி வந்துள்ளார்.
ஒருநாள் திடீரென இவருடைய முதலாளி மரணித்துவிட்டதால் இவருடைய நிறுவனம் மூடப்பட்டு இவருடைய வேலை வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது.
பின்னர் புதிய தொழில் வாய்ப்புக்களை தேடிக்கொண்டிருந்த கஸாலி ஜெயின் வாழ்க்கையில் எதிர்பார்த்த வகையில் ஒரு விபத்து இடம்பெற்று அவருடைய இரு பாதங்களும் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளது.
உறவினர்கள் மற்றும் அயலவரின் உதவியுடன் வாழ்க்கையை தொடர்ந்த வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் அந்த உதவிகளும் இல்லாமல் போயுள்ளது.
இந் நிலையில் கஸாலி ஜெயின் அன்று முதல் யாசகம் பெற்று தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.
தன் குடும்பத்திற்காக யாசகம் பெற, முடியாத கால்களோடு வீதிக்கிறங்கிய அவர் அன்று முதல் இன்று வரை சுமார் 18 ஆண்டுகளாக யாசகம் பெற்றும் சிறிய சிறிய வீதியோரக்கடைகளில் சிறிய வேலைகளை செய்தும் நாளாந்தம் கிடைக்கும் சிறிய தொகை பணத்தை வைத்து தன் குடும்பத்தை தாங்கி வந்துள்ளார்.
பிள்ளைகள் வளர வளர குடும்ப செலவுகளும் அதிகரிக்க தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்களை தேடி வந்த நிலையில் அவருடைய உடல் நிலை மற்றும் வயது காரணமாக அவருக்கு எங்குமே தொழில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதன் பின்னர் கொழும்பு பிரதான வீதியில் இருந்த சில காரியாலய ஊழியர்களுக்கு தேனீர் வாங்கி சென்று கொடுப்பதும், அந்த காரியாலயங்களை சுத்தம் செய்யும் வேலையும் செய்து கொடுத்து அதன் மூலம் கிடைத்த பணத்தையும் பெற்று தன் குடும்ப செலவுகளை பார்த்து வந்துள்ளார்.
இப்படியான சிறிய சிறிய வேலைகளை செய்து கிடைத்த பணத்திலும் அதே போல் யாசகம் பெற்று அதில் கிடைத்த பணத்திலும் தான் 18 வருட வாழக்கை பயணத்தை கடந்து வந்துள்ளார்.
சாதாரண தரம் படித்து விட்டு குடும்ப நிலைக்கருதி 19 வயதான இவருடைய மூத்த மகன் கிடைக்கும் சிறிய சிறிய வேலைகளையும் பார்த்து வருகின்றார்.அதில் கிடைக்கும் வருமானத்தை சேமித்து வீட்டு வாடகையினை மாத மாதம் செலுத்தி வருகின்றனர். 15 வயதான இவருடைய மகள் வீட்டின் அருகில் உள்ள ஒரு பாடசாலையில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கின்றார்.