நிறுவனங்களினால் மருந்துகளின் விலை வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளமையில் நோயாளர்களும் தங்களது தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தனியார் மருந்தக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தும் அதிகாரம் தேசிய ஓளடத கட்டுப்பாட்டு அதிகாரசபைக்கு உள்ள போதிலும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாத நிலையில் அவர்கள் உள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதன்படி மருந்துகளின் விலையை எம்மால் கட்டுப்படுத்த முடியாது. மக்களின் பிரச்சினைகளை மாத்திரமே எம்மால் கேட்க முடியும். தற்போது மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். வழமையாக மாதாந்தம் மருந்துகளுக்காக 3,000 செலவிட்ட மக்கள், தற்போது சுமார் 9,000 ரூபாவை செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகாரசபையும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு டொலர் அவசியமாகவுள்ளதால் நாணய கடிதங்களை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் நாணய கடிதங்களை விடுவிக்காமல் நாட்டுக்கு மருந்து பொருட்களை கொண்டு வரமுடியாது எனவும், அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்தன தெரிவித்துள்ளார்.