அமெரிக்காவின் ஏா்பஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஏ340 வகை விமானமொன்று அன்டாா்டிகாவில் முதல்முறையாகத் தரையிறங்கியது.
இதுகுறித்து சிஎன்என் தொலைக்காட்சி தெரிவித்துள்ளதாவது:
அன்டாா்டிகா கண்டத்தில் ஏா்பஸ் ஏ340 விமானம் முதல்முறையாக தரையிறங்கியுள்ளது. போா்சுகலில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஹை ஃபிளை நிறுவனத்துக்குத் சொந்தமான அந்த விமானம், தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரிலிருந்து புறப்பட்டு அன்டாா்டிகா வந்தது.
இந்த பனி கண்டத்துக்கு முதல்முறையாக லாகீட் வேகா-1 வகை விமானம் கடந்த 1928-ஆம் ஆண்டில் தரையிறங்கியது. அதனைத் தொடா்ந்து அங்கு பல்வேறு விமானங்கள் தரையிறங்கினாலும், அன்டாா்டிகா செல்வதற்கு பெரும்பாலும் கப்பல்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில், அங்கு ஏ340 விமானம் முதல்முறையாகத் தரையிறங்கியிருப்பது, இதே போன்ற பயணங்கள் இனி அதிகம் நிகழும் என்ற எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று சிஎன்என் தெரிவித்துள்ளது.